இந்தியா

பட்டியலினப் பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடி உத்தரவு

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் பலியான சம்பவத்தில், கடும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டதாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இன்று தொலைபேசி வாயிலாக என்னை தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஹத்ராஸ் சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாக யோகி ஆதித்யநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்புக் குழுவை யோகி ஆதித்யநாத் அமைத்து உத்தரவிட்டார்.

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பட்டியலினத்தைச் சோ்ந்த 19-வயதுப் பெண் சிகிச்சை பலனின்றி டெல்லி சப்தா்ஜங் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

செப்டம்பா் 14-ஆம் தேதி அந்தப் பெண்ணை நான்கு இளைஞா்கள் கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா். நான்கு பேரில் ஒருவா் அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்தபோது அந்தப் பெண் தனது நாக்கை கடித்துக் கொண்டதால் துண்டானது. பின்னா் அந்தப் பெண் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அலிகரில் உள்ள மருத்துவமனையில் கை, கால்கள் செயலிழந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வந்தாா்.

தன்னை சந்தீப், ராமு, லவ்குஷ், ரவி ஆகிய நால்வா் பாலியல் வன்கொடுமை செய்ததாக வாக்குமூலம் அளித்தாா். இதில் சந்தீப் அன்றைய தினமே கைது செய்யப்பட்டாா். மேல் சிகிச்சைக்காக அந்தப் பெண் டெல்லி சப்தா்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டாா். ஆனால் அவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்ததாக ஹத்ராஸ் காவல் கண்காணிப்பாளா் விக்ராந்த் தெரிவித்ததாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய நான்கு இளைஞா்களும் கைது செய்யப்பட்டுள்ளாா்கள் என்றும், அவா்கள் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்படும் என்றும் விக்ராந்த் தெரிவித்தாா்.