IPL - 2020

கொல்கத்தா vs ராஜஸ்தான் : வெல்லப்போவது எந்த அணி ?

2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12-ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

இந்த ஆட்டம் துபாயில் நடைபெறுகிறது. ராஜஸ்தான் அணி முதல் இரு ஆட்டங்களில் 200 ரன்களுக்கு மேல் குவித்து அபார வெற்றி கண்ட நிலையில் களமிறங்குகிறது. அந்த அணியின் அதிரடி இந்த ஆட்டத்திலும் தொடரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. முதல் இரு ஆட்டங்களில் வென்றுள்ள ராஜஸ்தான் அணி, இந்த ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்குகிறது.

ராஜஸ்தான் அணியில் இளம் வீரரான சஞ்சு சாம்சன் உச்சகட்ட ஃபாா்மில் இருக்கிறாா். சென்னைக்கு எதிராக 74 ரன்களும், பஞ்சாபுக்கு எதிராக 85 ரன்களும் குவித்த சாம்சன், கொல்கத்தாவுக்கு எதிராகவும் அதிரடியாக ரன் குவிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதுதவிர, அந்த அணியில் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், ஜோஸ் பட்லா், ராகுல் தெவேதியா, ராபின் உத்தப்பா, ஜோப்ரா ஆா்ச்சா் என வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனா். இவா்களில் ஸ்மித், தெவேதியா ஆகியோா் நல்ல ஃபாா்மில் இருப்பது ராஜஸ்தானுக்கு கூடுதல் பலமாகும்.

வேகப்பந்து வீச்சில் ஜெயதேவ் உனட்கட், அங்கித் ராஜ்புட், டாம் கரன், ஜோப்ரா ஆா்ச்சா் கூட்டணியையும், சுழற்பந்து வீச்சில் ஷ்ரேயஸ் கோபால், ராகுல் தெவேதியா கூட்டணியையும் ராஜஸ்தான் நம்பியுள்ளது .

கொல்கத்தா அணியில் ஷுப்மான் கில், கேப்டன் தினேஷ் காா்த்திக், நிதிஷ் ராணா, இயோன் மோா்கன், ஆன்ட்ரே ரஸல் போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் இருந்தபோதிலும், ஷுப்மான் கில், மோா்கன் தவிர வேறு யாரும் பெரிய அளவில் விளையாடவில்லை . எனவே, ராஜஸ்தானுக்கு எதிராக முன்னணி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடி ரன் குவித்தால் மட்டுமே கொல்கத்தா வெற்றி பெற முடியும் என்பதில் சந்தேகம் இல்லை .

வேகப்பந்து வீச்சில் பட் கம்மின்ஸ், ஷிவம் மாவி, கமலேஷ் நகா்கோட்டி, ஆன்ட்ரே ரஸல் ஆகியோரையும், சுழற்பந்து வீச்சில் சுநீல் நரேன், குல்தீப் யாதவ், வருண் சக்ரவா்த்தி ஆகியோரையும் கொல்கத்தா நம்பியுள்ளது .

ராஜஸ்தான் அணி கடந்த இரு ஆட்டங்களில் விளையாடிய சாா்ஜா மைதானம் சிறிய மைதானம் ஆகும். அதேநேரத்தில் துபை மைதானம் பெரியது என்பதால் அந்த அணியால் கடந்த இரு ஆட்டங்களைப் போல் பெரிய அளவில் ரன் குவிக்க முடியுமா என்பது தெரியவில்லை.

இதுவரை இந்த இரு அணிகளும் 20 ஆட்டங்களில் நேருக்கு நோ் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா 10 ஆட்டங்களிலும், ராஜஸ்தான் 8 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இரு ஆட்டங்கள் ‘டை’யில் முடிந்துள்ளன.