குற்றம்

உ.பி-யில் தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவம்…

உத்தரப்பிரதேசத்தில் 17 வயதுடைய மேலும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் நேற்று முன் தினம் பட்டியலினத்தை சேர்ந்த 19 வயது இளம் பெண் ஆதிக்க சாதியினரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து பல்ராம்பூர் பகுதியில் 22 வயதான மற்றொரு படியலினப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த இரு சம்பவங்களுக்கும் பல்வேறு பெண்கள் அமைப்பினர் மற்றும் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மற்றொரு பாலியல் வன்கொடுமை அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பாக்தாத் பகுதியில் 17 வயதான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அழுத்தம் மற்றும் மிரட்டல் காரணமாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பாக்தாத் பகுதியில் கடந்த 27-ஆம் தேதி 17 வயதுடைய இளம்பெண் வீட்டில் உள்ள இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். மேலும் தொடர் மிரட்டல் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளான இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள காவல்துறையினர் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு இளைஞரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.