ஆட்ட நாயகன் விருதை அம்மாவிற்கு சமர்ப்பித்த ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரர்
2020 ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெற்ற “ஆட்ட நாயகன்’ விருதை தனது தாயாருக்கு அர்ப்பணிப்பதாக சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் தெரிவித்தார்.
அபுதாபியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது. இதில், முதலில் பேட் செய்த சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 4 ஓவர்களில் 13 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச்சென்றார்.
ஆட்டம் முடிந்த பிறகு ரஷித் கான் கூறியதாவது: கடந்த ஒன்றரை ஆண்டுகாலம் என் வாழ்வில் மிகக் கடினமான காலக்கட்டம் ஆகும். முதலில் எனது தந்தை காலமானார். அவரைத் தொடர்ந்து கடந்த ஜூனில் எனது தாயாரும் காலமாகிவிட்டார். அதன் காரணமாக இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு எனக்கு கொஞ்சம் காலஅவகாசம் தேவைப்பட்டது.
என் தாயார் என்னுடைய மிகப்பெரிய ரசிகை. குறிப்பாக, ஐபிஎல் போட்டியில் நான் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றால், அன்றைய தினம் இரவில் என்னிடம் அதைப் பற்றி எனது தாய் நீண்ட நேரம் பேசுவார். அதனால் இந்த ஆட்டநாயகன் விருதை என் தாயாருக்கு அர்ப்பணிக்கிறேன் என தெரிவித்தார் .