சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக நடிகை கஸ்தூரிக்கு சம்பளம் தரவில்லையா? பிரபல தனியார் தொலைக்காட்சி அளித்த விளக்கம்…

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிந்து ஓராண்டு கடந்த பின்னரும் தனக்கு சம்பளம் தரவில்லை என்று நடிகை கஸ்தூரி குற்றம்சாட்டியிருந்த நிலையில் அதுகுறித்து விஜய் டிவி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

நடிகை கஸ்தூரி அரசியல், சமூக பிரச்னைகள் குறித்து சமூகவலைதளத்தில் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருபவர். கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர், நிகழ்ச்சி முடிந்து ஓராண்டாகியும் தனக்கு இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, “அந்த தனியார் தொலைகாட்சிக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. ஒரு வருடத்திற்கும் மேலாக இன்னும் எனக்கு சம்பளம் தரப்படவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டதே, ஆதரவற்ற குழந்தைகளின் ஆப்ரேஷன் செலவுக்காகத்தான். நான் எப்போதுமே பொய் வாக்குறுதிகளை நம்புவதில்லை. இதிலும் இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார்.

வரும் அக்டோபர் 4-ம் தேதி தமிழில் பிக்பாஸ் 4-வது சீசன் தொடங்கப்பட உள்ள நிலையில் கஸ்தூரி தனக்கு இன்னும் சம்பளம் தரப்படவில்லை என்று கூறியிருப்பது சர்ச்சையானது. இந்நிலையில் இதுகுறித்து விஜய் டிவி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அதில், “எங்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் ஒப்பந்த அடிப்படையில் கலந்து கொள்பவர்களுக்கு குறித்த நேரத்தில் அதற்கான சம்பளத்தை கொடுத்து விடுவது வழக்கம். அதைப்போல நடிகை கஸ்தூரி பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான சம்பளத்தை 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வழங்கப்பட்டுவிட்டது.

அவருடைய ஜிஎஸ்டி பதிவு முறை பொருந்திப்போகாத காரணத்தால் அதை மட்டும் நிறுத்தி வைத்திருக்கிறோம். கஸ்தூரி அதற்கான ஆவணங்களை கொடுப்பதற்காக காத்திருக்கிறோம். அவை ஒப்படைத்த பின்னர் அதற்கான தொகையையும் அவரிடம் கொடுத்துவிடுவோம்.

பிக்பாஸ் தவிர அவர் விஜய் டிவியில் கலந்து கொண்ட மற்றொரு நிகழ்ச்சிக்கும் அவர் விலைவிவர பட்டியல் (invoice) சமர்ப்பிக்கவில்லை. அதனால் அந்தத் தொகையை தருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது” இவ்வாறு அந்த தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .