ராஜஸ்தான் அணிக்கு முதல் தோல்வி : உற்சாக ஊஞ்சலில் கொல்கத்தா அணி…
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் முதல் தோல்வியை தழுவியுள்ளது .
2020 ஐ.பி.எல் தொடரின் 12-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் மோதின. இதில் டாஸ்வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது .
இதையடுத்து ,175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சனும் 8 ரன்களில் ஆட்டமிழந்து அனைவர்க்கும் அதிர்ச்சியளித்தார் . ராபின் உத்தப்பாவும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ச்சியாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தநிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தடுமாறியது. கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய ராகுல் டிவாட்டியா 14 ரன்களில் ஆட்டமிழந்தார். டாம் குரான் மட்டும் ஒற்றை நபராக களத்தில் அதிரடியாக ஆடினார்.
இறுதிவரை அதிரடியாக ஆடிய டாம் குரான் 36 பந்துகளில் 54 ரன்களைக் குவித்தார். இந்நிலையில் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் தோல்வியடைந்தது ராஜஸ்தான் அணி .