தக்க சமயத்தில் இந்திய அரசு நிதியுதவி அளித்தமைக்கு நன்றி – மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா சாஹித்
மாலத்தீவின் கடினமான பொருளாதார நிலைமையை சமாளிக்க, அந்நாட்டுக்கு இந்தியா ரூ.1,841 கோடி (250 மில்லியன் டாலர்) நிதியுதவி அளித்துள்ளது. இதற்காக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா சாஹித் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பொதுச் சபையின் 75ஆவது ஆண்டு விழா கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை அன்று உரையாற்றினார் அப்துல்லா சாஹித்.
அப்போது உலகம் முழுவதும் கரோனா தொற்று பேரிடர் நிலவி வருகிறது. இந்த சூழலில் உலகளாவிய ஒத்துழைப்பு தேவைப்படுவதன் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் மாலத்தீவுக்கு நிதி, பொருள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை பல நாடுகள் தாராளமாக வழங்கியுள்ளன.
சவாலான நேரங்களில் எங்களுக்கு அவர்கள் துணைநிற்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். சமீபத்தில் மாலத்தீவுக்கு இந்தியா ரூ.1,841 கோடி (250 மில்லியன் டாலர்) நிதியுதவி அளித்துள்ளது. பேரிடர் காலத்தில் தனியொரு நன்கொடையாளராக மாலத்தீவுக்கு இந்தியா அளித்த மிகப்பெரிய தொகை இது.
எங்களுக்கு உதவி செய்த இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.கரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பல நாடுகள் தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம் என தெரிவித்தார் .
.