குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை : 4 பேர் கைது
பாளையங்கோட்டை அருகே இளைஞர் கொலை தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் விநாயகம் என்பவரின் மகன் சதீஷ்குமார் (25). இவர் பாளையங்கோட்டை அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் லாரி கிளீனராக வேலை செய்து வந்தார். இவரும், இவருடன் வேலை செய்த தூத்துக்குடி மாவட்டம் நாணல்காடு பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார், மற்றும் நடுவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சுடலை உள்பட 5 பேர் பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சி காட்டுப்பகுதியில் புதன்கிழமை ஒன்றாக மது அருந்தினர் .
அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதில் ஏற்பட்ட மோதலில் சதீஷ்குமார் உயிரிழந்தார். இதையடுத்து முத்துக்குமார் உள்ளிட்ட 4 பேர் தப்பிச் சென்றனர். இந்நிலையில் நடுவக்குறிச்சி காட்டுப் பகுதியில் இளைஞர் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் நாங்குநேரியில் டிஎஸ்பி அலுவலகத்தில் முத்துக்குமார் உள்பட 4 பேரும் வியாழக்கிழமை சரணடைந்தனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து திருநெல்வேலி தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்