IPL - 2020

இன்றைய போட்டியில் (பஞ்சாப் vs மும்பை) பலப்பரிட்சை…

2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13-வது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இன்று மோதுகின்றன.

அபுதாபியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன. இரு அணிகளுமே இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடிய நிலையில், தலா ஒரு வெற்றியையும், இரு தோல்விகளையும் சந்தித்துள்ளன. இதுதவிர, இரு அணிகளுமே கடந்த ஆட்டத்தில் 200 ரன்களுக்கு மேல் குவித்த நிலையில், இந்த ஆட்டத்தில் மோதுகின்றன. அதனால் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, குவின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷன் கிஷான், ஹார்திக் பாண்டியா, கிரண் போலார்ட் என வலுவான பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் இஷன் கிஷான் 58 பந்துகளில் 99 ரன்களும், போலார்ட் 24 பந்துகளில் 60 ரன்களும் குவித்தது குறிப்பிடத்தக்கது. அவர்களின் அதிரடி இந்த ஆட்டத்திலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், மும்பையின் பந்துவீச்சு சற்று கவலையளிப்பதாக உள்ளது. எனவே, இந்த ஆட்டத்தில் ஜேம்ஸ் பட்டின்சனுக்குப் பதிலாக மெக்லீனாகான் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. ஜஸ்பிரித் பும்ரா, டிரென்ட் போல்ட், சுழற்பந்து வீச்சாளர்களான கிருணால் பாண்டியா, ராகுல் சாஹர் ஆகியோரின் பந்துவீச்சு மும்பையின் வெற்றி வாய்ப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் அணியில் கேப்டன் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறார்கள். ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 183 ரன்கள் குவித்தது. ராகுல் 69 ரன்களும், அகர்வால் 106 ரன்களும் குவித்தனர்.

இந்த ஜோடி மும்பை பந்துவீச்சாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டரில் கிளன் மேக்ஸ்வெல், நிகோலஸ் பூரண், சர்ப்ராஸ் கான் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ரன்களை வாரி வழங்கிய ஷெல்டான் காட்ரெலுக்குப் பதிலாக கிறிஸ் கெயில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சில் முகமது சமி, ஜேம்ஸ் நீஷம் கூட்டணியையும், சுழற்பந்து வீச்சில் ரவி பிஷ்னோய், முருகன் அஸ்வின் கூட்டணியையும் நம்பியுள்ளது பஞ்சாப்.