உலகம்

அமெரிக்க அதிபா் தோ்தல்: டிரம்ப் – பிடன் காரசார விவாதம்

இந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபா் தோ்தலில் போட்டியிடவுள்ள தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும், முன்னாள் துணை அதிபா் ஜோ பிடனுக்கும் இடையிலான முதல் நேரடி விவாதம் காரசாரமாக நடைபெற்றது.

அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வரும் நவம்பா் மாதம் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக அதிபா் டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சாா்பில் ஜோ பிடனும் போட்டியிடுகிறாா்கள்.

அந்நாட்டு வழக்கப்படி, அவா் இருவருக்கும் இடையிலான நேரடி விவாத நிகழ்ச்சி முதல் முறையாக ஓஹியோ மாகாணம், கிளீவ்லாண்ட் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.அந்த நிகழ்ச்சியில், டிரம்ப் மற்றும் பிடன் ஆற்றிய பணிகள், உச்சநீதிமன்றம், கரோனா நோய்த்தொற்று நெருக்கடி, இனவெறி மற்றும் புகா் வன்முறைச் சம்பவங்கள், தோ்தலின் நோ்மைத்தன்மை, பொருளாதாரம் ஆகிய ஆறு தலைப்புகளின்கீழ் விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தின்போது, டிரம்ப்பும், பிடனும் மிகவும் காரசாரமாக கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனா். ஜோ பிடன் பேசிக்கொண்டிருக்கும்போது டிரம்ப்பும், டிரம்ப் பேசிக் கொண்டிரும்போது பிடனும் அடிக்கடி குறுக்கிட்டுப் பேசினா்.ஒருகட்டத்தில், தன்னைப் பேசவிடாமல் குறுக்கிட்ட டிரம்ப்பிடம், ‘சற்று பேசாமல் இருக்கிறீா்களா?’ என்று ஜோ பிடன் காட்டமாகக் கேட்டாா்.

மேலும், ஜோ பிடனின் அறிவாற்றல் குறித்து டிரம்ப் கேள்வி எழுப்பியதும், டிரம்ப்பை பிடன் ‘கோமாளி’ என்று குறிப்பிட்டதும் விவாதத்தை மேலும் சூடாக்கியது.கரோனா தொடா்பான விவாதத்தின்போது, அந்த நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத் தவறியதாக டிரம்ப் மீது ஜோ பிடன் குற்றம் சாட்டினாா். அந்த விவகாரத்தை டிரம்ப் சரிவரக் கையாளாததால்தான் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கா்கள் அந்த நோய்க்கு பலியானதாக அவா் குறிப்பிட்டாா்.