அரசியல்

முதல்வரும் துணை முதல்வரும் ராமன்- லட்சுமணன் போல் ஒத்துமையாக செயல்பட்டு வருகிறார்கள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மதுரையில் மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி மேலமாசி வீதியில் அவரது சிலைக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-
கிராமங்களில் கூட்டப்படும் கிராமசபை கூட்டங்கள் மிகவும் முக்கியமானது. தற்போது கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனா தடுப்பில் தமிழகம் தான் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாகவும் செயல்பட்டு வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டால் நோய் பரவும் சிக்கல் இருப்பதாக அரசுக்கு தகவல் கிடைத்தது. இதனால் தான் கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஆனால் இதையும் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் அரசியல் ஆக்குகிறார். வீட்டில் அமர்ந்து கொண்டு யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். கிராம சபைகளுக்கு தான் கூட்டங்களை நடத்த வேண்டாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

அ.தி.மு.க.வில் அடுத்த முதல்-அமைச்சர் யார்? என்பதில் எந்த குழப்பமும் இல்லை. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 3 முறை முதல்-அமைச்சராக இருந்து பல்வேறு வரலாற்று சாதனைகளை செய்திருக்கிறார். தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

பாரத பிரதமரின் பாராட்டையும் பெற்ற முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி திகழ்ந்து வருகிறார். முதல்-அமைச்சர் பழனிசாமி செயல்படுத்தி வரும் திட்டங்களால் அ.தி.மு.க.வுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் ஒற்றுமையாக இருந்து ஆட்சியை நடத்தி வருகிறார்கள். இதில் எந்த சர்ச்சையும் இல்லை. இருவரும் ராமன்-லட்சுமணனாக இருந்து அ.தி.மு.க.வையும், அரசையும் வழிநடத்தி வருகிறார்கள் என தெரிவித்தார் .