கூட்டத்தில் ராகுல்காந்தி தவறி விழுந்திருப்பார் அதை தள்ளிவிட்டதாக சித்தரித்துவிட்டனர் – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி
கூட்டத்தில் ராகுல்காந்தி தவறி விழுந்திருப்பார் அதை தள்ளிவிட்டதாக சித்தரித்துவிட்டனர் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “மு.க.ஸ்டாலின் தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்துவார்; கடையைத் திறப்பார். திமுக ஆட்சியில் நடந்த அக்கிரமம், விவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை ஸ்டாலின் திரும்பிப் பார்க்கவேண்டும்.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆன பின்பு விவசாயிகளுக்கு நெறய நன்மைகள் செய்யப்பட்டுள்ளது.
குடிமராமத்து மூலம் அனைத்து குளங்களும் தூர்வாரப்பட்டு நீர் சேகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நிரம்பிக் கொண்டிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் எடுத்த முயற்சியின் காரணமாக தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை இல்லாமல் அனைவரும் நலமாக வாழ்கிறோம் .
ஏழை விவசாயிகளுக்கு, பாட்டாளிகள், படைப்பாளிகளுக்கு அனைத்து திட்டத்தையும் நிறைவேற்றிக் கொண்டிருப்பவர் தமிழக முதல்வர் தான் . முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புகழை கெடுப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சி செய்து வருகிறார் . அவருடைய முயற்சி ஒருகாலும் பலிக்காது. எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆட்சி தெளிவான , வலுவான , வல்லமையான , பொலிவான , சிறப்பான ஆட்சி என்று மக்களால் போற்றப்படும் ஆட்சியாய் உள்ளது
உ.பி -இல் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தால் அந்த குற்றவாளியைச் சுடவேண்டும். உத்தரபிரதேசத்தில் சிறுமி உயிரிழந்தது தொடர்பாக, காவல்துறை விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, இந்த நேரத்தில் ராகுல் காந்தி அங்கு சென்று வம்பு இழுக்கக்கூடாது. காவல்துறையினர் ராகுல் காந்தியை தடுத்து இருப்பார்கள்; தள்ளிவிட வாய்ப்பில்லை. ஒருவேளை அவர் தவறி விழுந்திருக்கலாம் என்றார் .
பெருந்தன்மைக்கு சொந்தக்காரர் பாரத பிரதமர் நரேந்திர மோடி. அவரும் உத்தரப்பிரதேச முதல்வரும், ராகுல் காந்தியை தள்ளி விடுவது போன்ற இழிவான செயலை செய்திருக்க மாட்டார்கள். நடந்த சம்பவம் சித்தரிக்கப்பட்டதாகவே தெரிகிறது. உண்மைக்கு புறம்பான சம்பவமாகவும் தெரிகிறது. இதை வைத்து ஈனத்தனமான அரசியல் நடத்தி லாபம் தேடும் காங்கிரஸ் கட்சியின் நினைப்பானது, பிழைப்பை கெடுக்கும் என கூறினார் .