தமிழ்நாடு

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதாகவும் இதனால் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று முதல் வரும் 5ம் தேதி வரை அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.