இந்தியா

உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப் பாதையை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

மலைப்பகுதியான ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் குளிர்காலங்களில் சாலைப் போக்குவரத்து மிகவும் சிரமமானதாக உள்ளது. குளிர் காலங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக இமாச்சலப்பிரதேசத்தின் எல்லைப் பகுதி மற்றும் லடாக் இடையேயான இணைப்பு ஒவ்வொரு ஆண்டும் 6 மாதங்களுக்கு துண்டிக்கப்படுகிறது.

இதனை சரிசெய்யும் வகையில், மணாலியிலிருந்து லஹால்-ஸ்பிட்டி பள்ளத்தாக்கு வரை 9 கிலோமீட்டர் தொலைவுக்கு நெடுஞ்சாலை சுரங்கப் பாதை அமைக்க 2000-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசு ஒப்புதல் அளித்தது.

இந்தப் பணிகளுக்கு 2002ம் ஆண்டு மே மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. மோசமான வானிலை உள்ளிட்ட கடும் சவால்களுக்கு மத்தியில் சுரங்கத்தை அமைக்கும் பணியை எல்லை சாலைகள் அமைப்பு நிறைவு செய்துள்ளது. இதையடுத்து, கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த, உலகின் மிக நீளமான சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைக்கிறார்.3500 கோடி ரூபாய் செலவில் இந்த சுரங்கப் பாதைப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்த சுரங்கப் பாதை மூலம், மணாலி – லே இடையேயான தூரம் 46 கிலோமீட்டர் குறைவதுடன், 4 முதல் 5 மணிநேரம் வரை பயண நேரம் குறையும்.

இமாச்சலப்பிரதேசத்தின் எல்லைப் பகுதிக்கும், லடாக்குக்கும் இடையே ஆண்டு முழுவதும் பயணம் மேற்கொள்ள முடியும். குதிரையின் பாதம் போன்ற வடிவில் இந்த சுரங்கப் பாதை அமைந்துள்ளது.8 மீட்டர் அகலத்துக்கு இரண்டு வழிப் பாதையாகவும், 5. 525 மீட்டர் உயரம் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு நாளும் 3 ஆயிரம் கார்கள் மற்றும் 1500 சரக்கு வாகனங்கள் செல்ல முடியும். அதிகபட்ச வேகம் 80 கிலோமீட்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப் பாதையில் ஒவ்வொரு 150 மீட்டரிலும் தொலைபேசி வசதி, ஒவ்வொரு 60 மீட்டர் தொலைவிலும் தீத்தடுப்பு அமைப்பு, ஒவ்வொரு 500 மீட்டரிலும் அவசரகால வெளியேறுவதற்கான வழி அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கிலோமீட்டரிலும் காற்றின் தரம் மதிப்பிடப்படும். ஒவ்வொரு 250 மீட்டரிலும் சிசிடிவி கேமராக்களுடன் தானியங்கி விபத்து கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பாதைக்கு வாஜ்பாயின் பெயரை சூட்ட கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.