சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனையில் அதிபர் டிரம்ப் அனுமதி
டிரம்பின் உதவியாளர் ஹோப் ஹிக்ஸுக்கு நேற்று வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், டிரம்ப் மற்றும் அவரது மனைவிக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து வெள்ளை மாளிகையில் உள்ள இல்லத்தில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அதிபருக்கும், அவரது மனைவிக்கும் சிறந்த மருத்துவ குழு சிகிச்சையளித்து வருவதாகவும், இல்லத்தில் இருந்தபடி அலுவலக பணிகளை டிரம்ப் மேற்கொள்வார் என்றும் அவரது சிறப்பு மருத்துவர் கான்லி தெரிவித்துள்ளார் .
டிரம்ப் மற்றும் அவரது மனைவி விரைவில் குணமடைய பிரதமர் மோடி உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இதனிடையே கொரோனாவால் தன்னை தனிமைப்படுத்தி கொண்ட டிரம்ப், அங்குள்ள வால்டர் ரீட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள டிரம்ப், தான் நலமுடன் இருப்பதாக உணர்வதாகவும், இருப்பினும் சில விஷயங்களை உறுதி செய்ய மருத்துவமனைக்கு செல்வதாகவும் கூறியுள்ளார். தனது மனைவி நலமுடன் இருப்பதாக குறிப்பிட்ட டிரம்ப், தனக்கு ஆதரவளித்து வருவோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.