அரசியல்

ரயில் முன்பதிவு குறுஞ்செய்தியில் இந்தி – ராமதாஸ் கண்டனம்

ரயில் முன்பதிவு குறுஞ்செய்தியில் இந்தி இடம்பெற்றிருப்பது திட்டமிட்ட இந்தி திணிப்பு என்று ராமதாஸ் வன்மையாக கண்டித்துள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ”தமிழ்நாட்டில் தொடர்வண்டி பயணச்சீட்டு முன்பதிவுக்கான குறுஞ்செய்திகள் கடந்த இரு நாட்களாக இந்தியில் அனுப்பப்படுகின்றன. இந்தி பேசாத மக்களுக்கு இந்தியில் குறுஞ்செய்தி அனுப்புவது திட்டமிட்ட இந்தித் திணிப்பு ஆகும். இதை தொடர்வண்டித்துறை கைவிட வேண்டும்.

இந்திய அலுவல் மொழிச் சட்டம் -1976 தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது. இந்த சட்டத்தின் ’சி’ பகுதியில் சேர்க்கப்பட்டுள்ள தமிழ்நாட்டில் அனைத்து அலுவல் சார்ந்த அறிவிப்புகளும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும். அதை மீறி இந்தியில் குறுஞ்செய்தி அனுப்பியது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் தொடர்வண்டி முன்பதிவு குறுஞ்செய்தி இந்தியில் அனுப்பப்பட்டதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் மத்திய அரசு சம்பந்தப்பட்ட அனைத்து அறிவிப்புகளும் தமிழிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே வெளியிடப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.