நான்கு நாள் சிகிச்சைக்கு பிறகு வெள்ளை மாளிகை திரும்பினார் அதிபர் டிரம்ப்…
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மருத்துவமனையில் இருந்து இன்று வெள்ளை மாளிகை திரும்பினார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவ. 3-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிபர் டிரம்ப்பும், அவரது மனைவி மெலானியாவும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கடந்த 1-ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மேரிலண்ட் மாகாணம், பெத்தெஸ்டாவில் உள்ள வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் கடந்த 2-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட டிரம்புக்கு ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருத்துகள் தரப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் 4 நாள் சிகிச்சைக்குப் பிறகு டிரம்ப் மருத்துவமனையில் இருந்து கடற்படை ஹெலிகாப்டர் மூலம் இன்று வெள்ளை மாளிகை திரும்பினார்.
உடல்நிலை குறித்து டிரம்ப் தனது சுட்டுரையில், “நான் உண்மையிலேயே நன்றாக இருக்கிறேன். கரோனாவுக்கு யாரும் அச்சப்பட தேவையில்லை. அது உங்களை ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காதீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யும் அளவுக்கு டிரம்ப் உடல்நிலை தேறிவிட்டதாகவும், கடந்த 72 மணிநேரமாக அவருக்கு மூச்சித்திணறல், காய்ச்சல் எதுவும் இல்லை என செள்ளை மாளிகை தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.