IPL - 2020

59 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி அணி…

2020 ஐபிஎல் தொடரில் டெல்லி – பெங்களூரு இடையேயான லீக் போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

டெல்லியின் துவக்க ஆட்டக்காரர்களான, பிரித்வி ஷா, ஷிகர் தவான் களத்துக்கு வந்தனர். இருவரும் இணைந்து 6 ஓவருக்கு 63 ரன்களை சேர்க்க . சிராஜ் பந்தில் கேட்ச் கொடுத்து பிரித்வி ஷா வெளியேறினார். ஷிகர் தவானும் நிலைக்கவில்லை.

அடுத்து வந்த ஸ்டோனிஸ் 26 பந்துகளில் 53 ரன்களை எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்களைச் சேர்த்தது டெல்லி அணி .

197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு ஆரோன் பின்ச், படிக்கல் இணை தொடக்கம் கொடுத்தது. படிக்கல் 3வது ஓவரில் வெளியேற, கோலி களத்துக்கு வந்தார். விராட் கோலி ஒருபுறம் அணியை சரிவிலிருந்து தாங்க, மறுபுறம் வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்.

13வது ஓவரில் கோலியும் பெவிலியன் நோக்கி திரும்ப, அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தது. இறுதியாக 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த பெங்களூரு அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

டெல்லி அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டது. மேலும் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தைப்பெற்றுள்ளது.