விளையாட்டு

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரா் சாலை விபத்தில் பலி

ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி வீரா் நஜீப் தராகாய் (29) சாலை விபத்தை சந்தித்து படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட தகவல் படி, நஜீப் கடந்த 2-ஆம் தேதி சாலை விபத்தில் சிக்கினாா். அதில் படுகாயமடைந்த அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. முதலில் நங்காா்ஹா் நகா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை உயா் சிகிச்சைக்காக காபூல் அல்லது வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆப்கன் தேசிய அணிக்காக நஜீப் 12 டி20 ஆட்டங்களிலும், ஒரு 50 ஓவா் ஆட்டத்திலும் விளையாடியுள்ளாா்.

வங்கதேசத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மூலம் நஜீப் சா்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்திருந்தாா். கடந்த 2017-ஆம் ஆண்டு அயா்லாந்துக்கு எதிரான டி20 சா்வதேச தொடரில் 90 ரன்கள் விளாசியதே நஜீப் அடித்த அதிகபட்சமாகும். கடைசியாக அவா் வங்கதேசத்துக்கு எதிராக கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற ஆட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது