57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது மும்பை அணி
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
2020 ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது.
197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. ஆனால், மிகவும் மோசமான தொடக்கமே ராஜஸ்தானுக்கு அமைந்தது. இளம் வீரர் ஜெய்ஸ்வால் 2-வது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 6 ரன்களுக்கு பூம்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.
போல்ட் மீண்டும் அடுத்த ஓவரை வீச சாம்சன் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தார்.முதல் 3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்ததால், ஜோஸ் பட்லர் மற்றும் மஹிபால் லோம்ரார் நிதானம் காட்டி விளையாடி வந்தனர் .
இதனால், பவர் பிளே முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, சஹார் ஓவரில் சிக்ஸர் அடிக்க முயன்ற லோம்ரார் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு முழுக்க முழுக்க பட்லர் ஆட்டம் என்று தான் சொல்ல வேண்டும் . டாம் கரண் ஒத்துழைக்க பட்லர் அதிரடி காட்டி மிரட்டினார். இதன்மூலம், 24 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்த பட்லர், அடுத்த 10 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து 34-வது பந்தில் அரைசதம் எட்டினார்.
ராஜஸ்தான் கடைசி நம்பிக்கையாக விளையாடி வந்த பட்லர், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் அதிகளவிலேயே இருந்ததால் பவுண்டரிகளும் சிக்ஸருமாக அடித்து வந்தார். இந்த நிலையில், 14-வது ஓவரை பேட்டின்சன் வீசினார். அந்த ஓவரில் சிக்ஸ் அடிக்க முயன்ற பட்லர், பவுண்டரி எல்லையில் போலார்டின் கேட்ச்சால் ஆட்டமிழந்தார். அவர் 44 பந்துகளில் 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து, ஆர்ச்சர் தவிர்த்து ராஜஸ்தான் வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதன்மூலம், 11 பந்துகள் மீதமிருந்த நிலையில் 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது மும்பை. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.