தமிழ்நாடு

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் விரைவில் வீடு திரும்புவார் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு செப்டம்பர் 24-ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் மியாட் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக பேசிய பிரேமலதா விஜயகாந்த், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு விஜயகாந்தை அழைத்துச் சென்றோம் என்றார் .

பரிசோதனையில் அவருக்கு ரத்தத்தில் லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் , விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் இருக்கிறார். ஓரிரு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து பிரேமலதா விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இந்நிலையில் உடநலக்குறைவு காரணமாக மீண்டும் மியாட் மருத்துவமனையில் இன்று காலை விஜயகாந்த் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவமனை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “விஜயகாந்த்துக்கு கோவிட்19 சிகிச்சை முடிந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, சீரான திட்டமிட்ட தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, கதிரியக்க மதிப்பீடு செய்ததில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் கூடிய விரைவில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.