விளையாட்டு

பயிற்சி மற்றும் போட்டியில் பங்கேற்க ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் இந்திய குத்துச்சண்டை வீரர்கள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்போர் உள்பட 28 பேர் கொண்ட இந்திய குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் குழு பயிற்சி மற்றும் போட்டியில் பங்கேற்பதற்காக முறையே இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு அடுத்த வாரம் செல்கின்றனர் .

இந்நிலையில் , டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள மேரி கோம், அமெரிக்காவில் பயிற்சியில் இருக்கும் விகாஸ் கிருஷண், காயத்திலிருந்து மீண்டு வரும் மணீஷ் கெüஷிக் ஆகிய மூவரும் இந்தப் பயணத்தை தவிர்த்துள்ளனர். மேரி கோம் தற்போதைய நிலையில் தில்லியிலேயே பயிற்சி பெறப்போவதாகத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்கு பயணமாகும் குழுவில் 10 வீரர்கள், 6 வீராங்கனைகள் தங்களது உதவிப் பணியாளர்களுடன் செல்கின்றனர். இந்தக் குழுவினர் பயணத்துக்காக மத்திய அரசு ரூ.1.31 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்தக் குழுவில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அமித் பங்கல், ஆஷிஷ் குமார், சதீஷ் குமார், சிம்ரன்ஜித் கெüர், லோவ்லினா போர்கோஹெய்ன், பூஜா ராணி உள்ளிட்டோரும் அடங்குவர்.

இவர்கள் இத்தாலியின் அஸிஸி நகரில் வரும் 15-ஆம் தேதி முதல் 52 நாள்களுக்கு தங்கி பயிற்சி பெறவுள்ளனர். அதேவேளையில், 13 பேர் பிரான்ஸின் நான்டெஸ் நகரில் வரும் 28-ஆம் தேதி முதல் இரு நாள்களுக்கு நடைபெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கின்றனர்.

அந்தப் போட்டியில் ஆடவருக்கான 57 கிலோ, 81 கிலோ, 91 கிலோ மற்றும் மகளிருக்கான 57 கிலோ பிரிவுகள் உள்ளன. இந்தப் பிரிவுகளில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இந்திய வீரர், வீராங்கனைகள் இதுவரை எவரும் வாய்ப்பை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.