ஒலிம்பிக் போட்டியிலிருந்து சீனாவை நீக்க அமெரிக்கா வலியுறுத்தல்
கொரோனா வைரஸை பரப்பி, எல்லா நாடுகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது மற்றும் உய்குர் முஸ்லிம்களை அடக்குமுறைக்கு ஆளாக்குவதற்காக, சீனாவை, ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து நீக்க வேண்டும்’ என, அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, அமெரிக்க அதிபர் டிரம்ப், இரண்டு நாட்களுக்கு முன், மீண்டும் வெள்ளை மாளிகை திரும்பினார். இந்நிலையில், ‘சீனா, கொரோனா வைரசை அமெரிக்காவிலும், இதர நாடுகளிலும் பரப்பியதற்கு மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும் இது சீனாவின் தவறு, என, டிரம்ப், ‘டுவிட்டரில்’ தெரிவித்துள்ளார். ஆனால், சீனா எத்தகைய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை, டிரம்ப் குறிப்பிடவில்லை. இதற்கிடையே, அமெரிக்க பார்லிமென்ட் வெளிவிவகார குழு, கொரோனா தோன்றியது குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சீனாவின் வெளிப்படையற்ற, தவறான செயல்பாடுகளால், கொரோனா கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி, லட்சக்கணக்கான மக்கள் உயிரைப் பறித்துள்ளது. கோடிக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். உலக நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு இதெல்லாம் புதிது அல்ல. சீனா செய்த குற்றங்களுக்கு பொறுப்பேற்க வைப்போம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் அடக்குமுறைக்கு ஆளாகி வருவது மற்றும் கொரோனா வைரசை பரப்பியது தொடர்பான கண்டன தீர்மானத்தை விரைந்து நிறைவேற்றும்படி, அமெரிக்க செனட் உறுப்பினர், ரிக் ஸ்காட், வெளியுறவுக்கான செனட் குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த தீர்மானத்தில், ‘ஒலிம்பிக் போட்டியில் இருந்து சீனாவை நீக்க வேண்டும்’ என, வலியுறுத்தப்பட்டுள்ளது.