இந்தியா

நாட்டை இணைப்பதில் தபால்துறையின் பங்கு மிகப்பெரியது – பிரதமர் மோடி

நாட்டை இணைப்பதில் தபால்துறையின் பங்கு மிகப்பெரியது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியத் தபால்துறையினரால் நாடு பெருமையடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்விட்சர்லாந்தில் 1874-ஆம் ஆண்டு யுனிவர்சல் தபால் ஒன்றியம் தொடங்கப்பட்டதை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 9-ஆம் தேதி உலக தபால் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், உலக தபால் தினத்தையொட்டி இந்திய தபால்துறை குறித்து பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். அதில், ”நாட்டை இணைப்பதில் தபால்துறை மிகப்பெரிய பங்காற்றுகிறது. நாட்டில் பலதரப்பட்ட மக்களின் முகங்களில் இன்பத்தை பாய்ச்சுகிறது.

இதனால், இந்தியத் தபால்துறையை எண்ணி பெருமையடைகிறேன். உலக தபால் தினத்தையொட்டி தபால்துறையை சேர்ந்தவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் அவர்களது முயற்சிகள் வெற்றி பெற வேண்டும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.