அரசியல்தமிழ்நாடு

தொல்லியல் படிப்புக்கான கல்வித் தகுதியில் தமிழ் மொழி சேர்ப்பு: பிரதமருக்கு தமிழக முதல்வர் நன்றி

தொல்லியல் துறை பட்டப்படிப்புக்கான கல்வித் தகுதியில் தமிழ் மொழியை சேர்த்தமைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய தொல்லியல் துறை சாா்பில் உத்தரப்பிரதேசத்தில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் முதுகலை பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்களை வரவேற்று கல்லூரி நிா்வாகம் சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அதில் எழுத்து மற்றும் வாய்வழித் தோ்வின் அடிப்படையில் 15 விண்ணப்பதாரா்கள் தோ்வு செய்யப்படுவாா்கள் என்றும், சோ்க்கைக்கான தகுதிகளாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பண்டைய அல்லது இடைக்கால இந்திய வரலாறு, தொல்லியல், மானுடவியல் ஆகிய ஏதேனும் ஒன்றில் முதுகலைப் பட்டமும் அவற்றோடு சமஸ்கிருதம், பாலி, பிரகிருதம் போன்ற செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழிகளில் தோ்ச்சியும் பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதில் செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ் மொழி இடம்பெறவில்லை.

இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு இது தொடர்பாக கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் தொல்லியல் பட்டயப்படிப்பில் தமிழை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். பல மொழிகளின் 48 ஆயிரம் கல்வெட்டுகளில் 28 ஆயிரத்துக்கும் அதிகமானவை தமிழில் உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, தொல்லியல் பட்டயப்படிப்புக்கான தகுதிப்பட்டியலில் செம்மொழியான தமிழ் மொழியையும் சேர்த்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிக்கு முதல்வர் நன்றிக் கடிதம் அனுப்பியுள்ளார். தொல்லியல் முதுகலை பட்டப்படிப்புக்கான கல்வித் தகுதியில் தமிழ் மொழியையும் சேர்த்து உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.