உலகம்

விரும்பினால் வீட்டிலிருந்தே வேலை பார்க்கலாம்…

மென்பொருள் நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் மைக்ரோசாஃப்ட், தனது ஊழியர்களில் விருப்பம் இருப்பவர்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்க முடிவு செய்திருப்பதாக அமெரிக்க ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

தற்போது கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பெரும்பான்மையான ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊழியர்கள் விரும்பினால், நிரந்தரமாகவே வீட்டிலிருந்தே பணியாற்ற வாய்ப்பளிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து வெளியான செய்தியில், கரோனா பேரிடர் காரணமாக, மைக்ரோசாஃப்டின் பெரும்பாலான ஊழியர்கள் தற்போதும் வீட்டிலிருந்தே பணியாற்றி வருகிறார்கள். அமெரிக்காவில் இருக்கும் அலுவலகத்தை அடுத்த ஆண்டு ஜனவரி வரையிலோ அல்லது அதற்கு முன்போ திறப்பதற்கான எந்த திட்டமும் மைக்ரோசாஃப்ட் கொண்டிருக்கவில்லை. அவ்வாறு திறக்கும்போது, ஊழியர்கள் விரும்பினால், நிரந்தரமாகவே வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்கலாம் என்ற முடிவையும் மைக்ரோசாஃப்ட் எடுத்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் தரப்பில் இது குறித்து கூறுகையில், கரோனா பேரிடர் நமது சிந்தனை, வாழ்க்கை முறை, வேலை என அனைத்தையும் மாற்றிவிட்டது. எனவே, ஊழியர்களின் வசதிக்கேற்ப பணியாற்றும் சூழலை வடிவமைத்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.