கேப்டன் கோலி அபாரம் – பெங்களூரு அணி சூப்பர் வெற்றி
2020 ஐபிஎல் தொடரின் நேற்றைய இரண்டாவது ஆட்டத்தில் சென்னை – பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் படிக்கல் சிறப்பாக விளையாடி 33 ரன்கள் எடுக்க, ஆரோன் பின்ச் 2 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கோலி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார்.
படிக்கல்லின் விக்கெட்டை தாகூர் வீழ்த்த, டிவில்லியர்ஸ் அடுத்ததாக ரன்கள் ஏதும் இல்லாமலேயே வெளியேற்றப்பட்டார். 20 ஓவர்கள் முடிவில் கோலியின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூர் அணி 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் பெங்களூரு அணி 76 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், வாட்சன் மற்றும் டூபிளீசிஸ் களமிறங்கினர். வாட்சன் 14 ரன்களிலும், டுபிளீசிஸ் 8 ரன்களிலும் வெளியேறினர். ராயுடு மற்றும் ஜெகதீசன் ஜோடி சற்றே தாக்குபிடிக்க, சென்னை வெற்றியை எட்டும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
ஆனால், இருவரும் விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து வந்தவர்களில் தோனி மட்டுமே 10 ரன்கள் என்ற இரட்டை இலக்கத்தை எட்டினார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.இது சென்னை அணிக்கு 5 வது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது