அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்து கணிப்பில் ஜோ பைடன் முன்னிலை
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், முக்கிய ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் வெளியிடும் மக்கள் மன நிலை மற்றும் கருத்துக்கணிப்புகளில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலை பெற்று வருகிறார்.
முன்னணி கருத்துக்கணிப்புகளில் அனைத்திலும் ஜனாதிபதி டிரம்பை விடவும் சுமார் 9.8 சதவீத முன்னிலையில் ஜோ பைடன் உள்ளார்.மேலும், ஜனாதிபதி டிரம்புடன் நேரிடையாக ஜோ பைடன் முன்னெடுத்த முதல் விவாதமானது ஜனநாயக கட்சிக்கே சாதகமான சூழலை ஏற்படுத்தியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ஜனாதிபதி டிரம்ப் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மூன்று நாட்கள் சிகிச்சைக்கு பின்னர், தாம் முற்றிலும் குணமடைந்துவிட்டதாக டிரம்ப் அறிவித்திருந்தாலும், ஜோ பைடனுடனான இரண்டாவது நேரடி விவாதத்தை டிரம்ப் தரப்பு ரத்து செய்தது.
இது மட்டுமின்றி, கொரோனாவில் இருந்து தாம் முற்றிலும் குணமடைந்துவிட்டதாக டிரம்ப் கூறிவருகிறார். அவரது மருத்துவர்கள் அவரிடம் இருந்து நோய் பரவாது என தெரிவித்து உள்ளனர். கடந்த வாரம் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை தொடர்பு கொண்டு நலம் விசாரித்திருந்தாலும், இங்கிலாந்து அரசாங்கம் ஜனநாயக கட்சி வேட்பாளருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.