பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிப்பு
2020 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பால் ஆர்.மில்க்ரோம் மற்றும் ராபர்ட் பி.வில்சன் ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதில், அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.
இந்நிலையில், இந்தாண்டிற்கான துறை வாரியாக நோபல் பரிசுகள் (அக்-5 ), திங்கள்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. மற்ற துறைகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏல முறைகள் குறித்த ஆராய்ச்சிக்காக ஆய்வாளர்கள் பால் ஆர்.மில்க்ரோம் மற்றும் ராபர்ட் பி.வில்சன் ஆகிய இருவருக்கு பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இவர்கள் இருவரும் ஏலக் கோட்பாட்டை மேம்படுத்தி புதிய ஏல வடிவங்களை கண்டுபிடித்துள்ளனர். இது உலகெங்கிலும் உள்ள விற்பனையாளர்கள், வணிகர்கள் மற்றும் வரி செலுத்துவோருக்கு பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.