IPL - 2020

ஒரு சீசனில் தடுமாறியதால் சிஎஸ்கே மோசமான அணியல்ல – வரலட்சுமி சரத்குமார்

ஒரு சீசனில் தடுமாறியதால் சிஎஸ்கே மோசமான அணி என்று கூற முடியாது . நான் இன்னும் சிஎஸ்கேவை விரும்புகிறேன். நம்பிக்கை வைப்போம் என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 10-ஆம் தேதி நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முதலில் பேட் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் சேர்த்தது. 170 ரன்களைத் துரத்திய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே சேர்த்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தத் தோல்விக்குப் பிறகு மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சமூக வலைதளத்தில் கடுமையாகச் விமர்சித்தார்கள். தோனியின் கேப்டன்சியைப் பலரும் விமர்சித்தார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வி குறித்து வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில், “நான் என்றுமே இப்படி உணர்ந்ததில்லை என்று நினைக்கிறேன். மிகவும் வருத்தமாக இருக்கிறது. இன்னும் நம் அணி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் நமக்காக வியர்வை சிந்தியிருக்கின்றனர். கடினமாக உழைத்திருக்கின்றனர். ஒரு சீசனில் அவர்கள் தடுமாறியதால் அவர்கள் மோசமான அணியாகமாட்டார்கள். நான் இன்னும் சிஎஸ்கேவை விரும்புகிறேன். நம்பிக்கை வைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.