வணிகம்

தொழில்துறை உற்பத்தி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 8% சரிவு

தொழில்துறை உற்பத்தி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 8 சதவீதம் சரிந்துள்ளதாக, மத்திய அரசு புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், தயாரிப்பு, சுரங்கம், மின் உற்பத்தி துறைகளின் செயல்பாடுகள் ஆகஸ்ட் மாதத்தில் மிகவும் பின்தங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தயாரிப்பு துறை உற்பத்தி 8.6 சதவீதமும், சுரங்கத்துறை உற்பத்தி 9.8 சதவீதமும், மின் துறை உற்பத்தி 1.8 சதவீதமும் சரிந்துள்ளதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில்லறை விலைப் பணவீக்கமும் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவாக செப்டம்பரில் 7 .34 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. தொழில்துறை உற்பத்தி புள்ளியை பொறுத்தவரை, உற்பத்தி துறையின் பங்களிப்புதான் மிக அதிகம். அதாவது, நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் 77.63 சதவீத பங்களிப்பை இந்த துறை வழங்குகிறது.

இது கடந்த ஆகஸ்ட்டில் 8.6 சதவீத சரிவை சந்தித்தது மிகப்பெரிய பாதிப்பாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்த உற்பத்திப்புள்ளி 1.7 சதவீத சரிவை அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.