அரசியல்இந்தியா

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மீது புதுவை முதல்வர் நாராயணசாமி புகார்..

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் எந்த முடிவையும் சொல்லாமல் கூட்டத்தை முடித்தார். இது ஜி.எஸ்.டி சட்ட விதிமுறைகளின் மீறல் என புதுவை முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார் .

சட்டமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதல்வர், இந்தியாவில் அதிகப்படசமாக புதுச்சேரியில் தான் 17% பேருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத்துறை மற்றும் அனைத்து துறைகளும் கொரோனா நோயை கட்டுப்படுத்த தீவிரமாகப் போராடி வருகின்றனர் என்றும் கூறினார். மேலும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் இழப்பிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசியவர், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி மாநிலத்திற்கு 798 கோடி ரூபாய் ஏப்ரல் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை.

கூட்டத்தில் மத்திய அரசு வெளிமார்க்கெட்டில் ஏற்பட்ட வங்கி இழப்பை ஈடு கொடுக்க வேண்டும் என 9 மாநிலங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கும் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை.

மாநிலத்துக்கு கொடுக்கப்பட வேண்டிய இழப்பீடு கொடுக்கப்படவில்லை. மாநில அரசை கடன் வாங்க சொல்கிறார்கள். மத்திய அரசு அனுமதி இல்லாமல் புதுச்சேரி கடன் வாங்க இயலாது. ஆனால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் எந்த முடிவையும் சொல்லாமல் கூட்டத்தை முடித்தார். இது ஜி.எஸ்.டி சட்ட விதிமுறைகளின் மீறல் என முதல்வர் நாராயணசாமி கூறினார்.