இந்தியா

சில வாரங்களில் இரண்டாம் கட்ட ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடையும்

அடுத்த வரும் சில வாரங்களில் இரண்டாம் கட்டமாக 4 ரபேல் விமானங்கள் பிரான்சில் இருந்து இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது தொடர்பான நிலைமையை ஆராய விமானப்படை அதிகாரிகள் குழு பிரான்ஸ் சென்றுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு, பிரான்சிடம் இருந்து 36 ரபேல் விமானங்களை வாங்க, ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது. இதற்காக ஜனவரி மாதம் முதல் பல்வேறு விமானப்படை அதிகாரிகள் குழுக்கள் பிரான்ஸ் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் முதல்கட்டமாக 5 ரபேல் விமானங்கள் கடந்த ஜூலை 29ம் தேதி இந்தியா வந்தடைந்து, செப்டம்பர் 10ம் தேதி விமானப்படையில் இணைக்கப்பட்டன.

இந்நிலையில் 2ம் கட்டமாக 4 ரபேல் விமானங்கள் இன்னும் சில வாரங்களில் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 5ம் தேதி விமானப்படை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், தளபதி பதாரியா கூறுகையில், 36 ரபேல் விமானங்களும் 2023ம் ஆண்டுக்குள் இந்தியா வந்தடையும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எல்லையில் சீனாவுடனான பதற்றம் நீடிக்கும் நிலையில் ரபேல் விமானங்களின் வருகை விமானப்படையின் போர்த்திறனை பலமடங்கு அதிகரித்துள்ளது.