இந்தியா

தமிழகத்தை தவிர்த்து சில மாநிலங்களில் இன்று முதல் திரையரங்குகள் திறப்பு..

கர்நாடகா, டெல்லி, கொல்கத்தா, புதுச்சேரியில் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. 50 சதவீத இருக்கைகளுடன் இன்று முதல் திரையரங்குகளை திறக்க, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. திரையரங்குகளை திறப்பது குறித்து அந்தந்த மாநிலங்கள் முடிவு எடுத்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

இதையடுத்து டெல்லி, மேற்கு வங்கம், கர்நாடகம், உத்தர பிரதேசம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள், இன்று முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி கொடுத்துள்ளன.

தனி மனித இடைவெளி, உடல் வெப்ப நிலை சோதனை, முகக்கவசம் போன்ற கட்டுப்பாடுகளுடன் திரையரங்கள் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகின்றன.

புதுச்சேரியில் முதல்கட்டமாக சண்முகா, ராஜா என்ற 2 திரையரங்குகள் மட்டும் திறக்கப்படுகின்றன. முதல் காட்சி காலை 11.45-க்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. சண்முகா திரையரங்கில் 125 ரூபாய் டிக்கெட் 100 ரூபாய்க்கும், 100 ரூபாய் டிக்கெட் 75 ரூபாய்க்கும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

உடல் வெப்பநிலை சோதனை, முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்டவற்றை கடைபிடிப்பதற்கான ஏற்பாடுகளை திரையரங்கினர் செய்துள்ளனர்.

ஏழு மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்படும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் இன்று ரிலீசாகிறது. இதில், மோடி கதாபாத்திரத்தில் விவேக் ஓபராய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .