தமிழ்நாடு

நீட் தேர்வில் சாதனை படைத்தார் அரசுப்பள்ளி மாணவன் ஜீவித்குமார்….

தமிழகத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அரசுப்பள்ளியில் படித்தவரும், ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ‘நீட்’ தேர்வில் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது . பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘நீட்’ தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர் ஜீவித்குமார், மொத்த மதிப்பெண் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்ததுமட்டுமில்லாமல் தம்மை போன்ற மாணவர்களுக்கு ஒரு நம்பிக்கை உதாரணமாய் மாறியுள்ளார் .

இந்த மாணவர் தேவதானப்பட்டி அருகே டி.வாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை நாராயணமூர்த்தி. இவர் சென்னையில் ஒரு பழச்சாறு தயாரிப்பு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி சொந்த ஊர் திரும்பிய அவர், தற்போது ஆடு மேய்த்து வருகிறார்.

மாணவர் ஜீவித்குமார் 664 மதிப்பெண்கள் பெற்றதன் மூலம் ‘நீட்’ தேர்வில் தேசிய அளவில் அரசுப்பள்ளி மாணவர்களில் அதிக மதிப்பெண் பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் தேர்ச்சி பெற்றவர்களில் 1,823-வது இடத்தை ஜீவித்குமார் பிடித்துள்ளார்.

அரசுப்பள்ளியில் சிறந்த மாணவராக விளங்கியதால் தனது ஆசிரியர்கள் உதவியுடன் தனியார் பயிற்சி மையத்தில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்றதாக ஜீவித்குமார் கூறியுள்ளார். அதற்கு பலனாக தற்போது தேர்வில் வெற்றிபெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.