ஒபாமாவின் பிரச்சாரத்தை கண்டு அஞ்சப்போவதில்லை-அதிபர் டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தலில் தமக்கு எதிரான பராக் ஒபாமாவின் பிரச்சாரத்தை கண்டு அஞ்சப்போவதில்லை என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்பும், துணை அதிபராக மைக் பென்ஸும் போட்டியிடுகின்றனர்.
இவர்களுக்கு எதிராக ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக ஜோ பிடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.
அதிபர் தேதலுக்கான பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களான ஜோ பிடனுக்கும், கமலா ஹாரிஸுக்கும் ஆதரவாக பிரசாரம் செய்ய முன்னாள் அதிபர் பராக் ஒபாமா முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், ”எனக்கு எதிரான ஒபாமாவின் பிரச்சாரத்தை கண்டு அஞ்சப்போவதில்லை . அவர்கள் சரியான முறையில் தங்களது செயல்களை மேற்கொண்டிருந்தால் நான் அதிபராக வென்றிருக்க முடியாது. அவர்கள் கீழ்த்தரமான செயல்களையே செய்து வருகின்றனர். அதனால் தான் நான் அதிபராக உங்கள் முன்பு நிற்கிறேன்” என்று கூறினார்.
”ஒபாமா கடந்த முறை ஹிலாரியை விட கடினமாக பிரச்சாரம் செய்தார். ஆனால் வெற்றி பெற்றது நான் தான். அதனால் ஒபாமாவின் தற்போதைய பிரசாரத்திற்கு கவலைப்படப்போவதில்லை” என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.