அரசியல்தமிழ்நாடு

அனுமதியின்றி ஊர்வலம் செல்ல முயன்றதாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கைது

தேனியில் அனுமதியின்றி ஊர்வலம் செல்ல முயன்ற காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தேனியில் புதிய வேளாண்மைச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், போடி விலக்கு பகுதியிலிருந்து ஆட்சியர் அலுவலகம் வரை கண்டன ஊர்வலம் நடைபெறும் என்று அறிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அனுமதியின்றி நடைபெறும் இந்த ஊர்வலத்தில், விவசாயத்திற்கு உபயோகப்படுத்தும் டிராக்டர் போன்ற வாகனங்களை பயன்படுத்தக் கூடாது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஸ்வி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் தேனியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த கே.எஸ்.அழகிரி, வேளாண்மை சட்டத்திற்கு எதிரான போரட்டத்தை சீர்குலைப்பதாக காவல் துறைக்கு கண்டனம் தெரிவித்தார். பின்னர், விடுதியிருந்து நேருசிலை வரை ஊர்வலமாகச் செல்ல முயன்ற கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஹசன் ஆருண், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் முருகேசன் உள்ளிட்டோரை, தேனி காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையில் காவலர்கள், விடுதி வாயில் முன்பு சாலையில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

கே.எஸ்.அழகிரி கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் 300 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் தேனி-குமுளி சாலையில் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.