கரோணா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட 144 தடையை மீறி அஞ்சலி செலுத்தியதாக சந்தன வீரப்பன் மனைவி முத்துலட்சுமி உட்பட 100 பேர் மீது வழக்குப்பதிவு
144 தடையை மீறி அஞ்சலி செலுத்தியதாக சந்தன வீரப்பன் மனைவி முத்துலட்சுமி உள்பட 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம், கர்நாடகம், கேரள மாநிலங்களுக்கு பெரும் சவாலாக விளங்கிய சந்தன கடத்தல் வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் கடந்த 2004ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் தமிழக அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
வீரப்பனின் சடலம் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள மூலகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. ‘ஆண்டுதோறும் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியும் அவரது குடும்பத்தாரும் வீரப்பனின் ஆதரவாளர்களும் மூல காட்டிற்கு வந்து அஞ்சலி செலுத்தி செல்வார்கள்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பாண்டிச்சேரி மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்த ஆண்டுதோறும் வருவது வழக்கம். நடப்பு ஆண்டில் கரோனா தொற்று காரணமாக வீரப்பன் சடலம் அடக்கம்செய்யப்பட்ட இடத்தில் கூட்டம் கூட காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். ஏற்கனவே கரோணா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவும் நீடித்து வருகிறது. இதனை மீறி அங்கு ஏராளமானோர் கூடி அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கரோனா பரவலுக்கு காரணமாகவும் இருந்ததாக மூலகாடு கிராம நிர்வாக அலுவலர் மோகன் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி மீதும் பா.ஜ.கமாநில இளைஞரணி நிர்வாகியுமான வித்யாராணி, வீரப்பனின் இளைய மகள் பிரபாவதி மற்றும் சேலம் மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் செயலாளர் மோகன்ராஜ் அமைப்பாளர் வெங்கடாஜலம் உட்பட 100 பேர் மீது கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.