Covid19உலகம்

ரஷியாவில் புதிதாக 16,319 ​பேருக்கு கரோனா தொற்று உறுதி

ரஷியாவில் சமீபமாக கரோனா பாதிப்பு குறைந்த நிலையில் இன்று அதிகபட்சமாக புதிதாக 16,319 ​பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும் 269 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

ரஷியாவில் கடந்த மாதம் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்த நிலையில், தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ரஷியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக ஒருநாளில் 16,319 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 4,999 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இதையடுத்து, மொத்த பாதிப்பு 1,431,635 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 269 பேர் உள்பட இதுவரை 24,635 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரத்தில் தற்போதுவரை 1,085,608 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 321,392 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரில் 2,300 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர்.

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவைத் தொடர்ந்து ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.