இளம் வீரர்கள் குறித்த தோனியின் கருத்து அர்த்தமற்றது – முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்
சென்னை அணியில் உள்ள இளம் வீரர்கள் குறித்த தோனியின் கருத்து அர்த்தமற்றது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் திங்கள் இரவு நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராகப் படுதோல்வி அடைந்த சென்னை அணி, பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை ஏறக்குறைய இழந்துவிட்டது.
இந்தப் போட்டிக்குப் பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் போது பேசிய கேப்டன் தோனி, ‘உண்மையை சொல்வதென்றால் இந்த ஆண்டு எங்களுக்கு சரியானதாக அமையவில்லை. அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு போதிய உத்வேகம் இல்லை. அதன் காரணமாகவே அவர்களை போட்டியில் களமிறக்கவில்லை. ஆனால் இனி வரும் ஆட்டங்களில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். போட்டிகளில் அவர்கள் விளையாடுவார்கள்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இளம் வீரர்கள் குறித்த தோனியின் கருத்து அர்த்தமற்றது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
போட்டி முடிந்த பிறகு தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் பேசிய அவர் கூறியதாவது: தோனி கூறுவதை என்னால் சுத்தமாக ஏற்றுக்கொள்ள முடியாது. இப்போதும் கூட தோனி நடைமுறைகள் குறித்து பேசிக் கொண்டு இருக்கிறார். ஆனால் அணியை தேர்வு செய்யும் நடைமுறையே தவறு என்றுதான் நாம் கூற வேண்டும்
இளம் வீரர்களிடம் ‘ஸ்பார்க்’ இல்லை என்று தோனி சொல்கிறார். ஜெகதீசன் போன்றோரிடம் இல்லாத ஸ்பார்க் கேதர் ஜாதவ், பியூஷ் சாவ்லாவிடம் இருக்கிறதா என்ன? தோனியின் கருத்து அர்த்தமற்றது மட்டுமல்ல ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று. நடைமுறை நடைமுறை என கூறிக்கொண்டே இறுதியாக ஐபிஎல் தொடரின் இறுதிக்கு சிஎஸ்கே வந்துவிட்டது
மேலும் இனி வரும் போட்டிகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கூறுகிறார். வாய்ப்பு வழங்கப்பட்ட ஒரு போட்டியிலேயே ஜெகதீசன் தன்னுடைய ‘ஸ்பார்க்’ என்ன என்பதை காட்டிவிட்டார்.
அதேபோல சுழற்பந்துவீச்சாளர் கரன் சர்மா ரன்களைக் கூடுதலாக கொடுத்தாலும் விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவருக்கு பதிலாக பியூஷ் சாவ்லாவை கொண்டு வந்தார்கள், ஒட்டுமொத்தமாக முடிந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.