குற்றம்தமிழ்நாடு

கும்பகோணத்தில் சொத்துதகராறு காரணமாக வழக்கறிஞர் மற்றும் அவரது நண்பர் வெட்டி படுகொலை!…

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சொத்துதகராறு காரணமாக வழக்கறிஞரையும், அவரது நண்பரையும் வெட்டி படுகொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கும்பகோணம் கிளாரட் நகரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் காமராஜ். இவர் உடல்நலமில்லாத தனது தந்தையுடன் மருத்துவமனையிலிருந்து நேற்று மாலை இருசக்கரவாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் வரும் வழியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென காமராஜை வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளனர் . இதில் படுகாயமடைந்த காமராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தந்தை பார்த்திபன் காயமின்றி உயிர் தப்பினார்.

இதையடுத்து , இதே கும்பலைச் சேர்ந்த சிலர், காமராஜின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கிருந்த அவரது நண்பர் சக்திவேலை சரமாரியாக வெட்டியதில் அவரும் உயிரிழந்தார்.

இந்நிலையில் கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி வழக்கறிஞர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த இரட்டை கொலைகள் தொடர்பாக வழக்கு பதிவு செய்த நாச்சியார்கோவில் போலீசார் 8 பேர் கொண்ட கும்பலை தேடிவருகின்றனர்.

காமராஜுக்கும் உறவினர் ராஜவேலுக்கும் இடையே 15ஆண்டுகளாகத் தொடரும் சொத்து பிரச்னை இருந்துவருவதாகக் கூறப்படுவதால் இதன் காரணமாகக் கொலை நடந்திருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.