உலகம்

குடும்பம் நடத்த போதிய சம்பளம் இல்லாததால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய இருக்கும் போரிஸ் ஜான்சன்!…

குடும்பம் நடத்த மாத சம்பளம் போதுமானதாக இல்லை என்பதால் பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒரு பத்திரிகையாளர். பத்திரிகைகளில் தலையங்கள் எழுதுவதும், மேடைப்பேச்சுகள் என பரபரப்பாக இயங்கி வந்த அவருக்கு அரசியல் வாழ்க்கை அழைப்பு கொடுத்தது. பின்னர் டோரி கட்சியில் சேர்ந்தார். தற்போது பிரதமராக இருக்கிறார். தான் பிரதமராக இருந்தாலும் தன்னுடைய மாதச்சம்பளம் செலவுக்கு போதுமானதாக இல்லை என தனது பதவியை அடுத்த ஆண்டு அவர் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக பெயரிட விரும்பதாக எம்பி ஒருவர் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி தற்போது பிரதமர் ஜான்சனின் சம்பளம் 1 லட்சத்து 50ஆயிரத்து 402 பவுண்டுகள்.(சுமார் ரூ.1 கோடியே 43 லட்சத்து 29 ஆயிரம்). இது முந்தைய வருவாயைக் காட்டிலும் மிகக் குறைவு. ஜான்சனுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். அதில் சிலர் இளம்வயதினர். அவர்களுக்கான செலவுகளை சமாளிக்கவும், விவகாரத்தான மனைவிக்கு சட்டப்படி மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையையும் அனுப்ப வேண்டி உள்ளதால் ஜான்சன் நிதி நெருக்கடியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய அவர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அரசியலுக்கு முன்பு பத்திரிகைகளில் எழுதுவது, மேடைப்பேச்சு என ஜான்சன் தற்போது வாங்கும் ஊதியத்தை விட இருமடங்கு அதிகம் சம்பாதித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.