இந்தியா

காவலர் வீரவணக்க நாள்: பாரத பிரிதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மலர் வளையம் வைத்து மரியாதை

நமது நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அக்டோபர் 21ம் தேதி இந்திய அரசு சார்பில் காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இன்று அக்டோபர் 21 வீர வணக்கநாளை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவலர் நினைவுச் சின்னங்களில் வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காவலர் வீரவணக்க நாளையொட்டி டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து காவலர்களின் தியாகத்தை போற்றும் வகையில் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறியதாவது : “காவலர் நினைவு நாள் என்பது இந்தியா முழுவதும் உள்ள எங்கள் காவல்துறை ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவிப்பதாகும். கடமையின்போது தியாகம் செய்த அனைத்து காவல்துறையினருக்கும் நாங்கள் மரியாதை செலுத்துகிறோம். அவர்களின் தியாகமும் சேவையும் எப்போதும் நினைவில் இருக்கும்.

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் இருந்து, கொடூரமான குற்றங்களைத் தீர்ப்பது வரை, பேரழிவு காலங்களில் உதவி செய்வதிலிருந்து, கொரோனா உடன் போராடுவது வரை, எங்கள் காவல்துறை ஊழியர்கள் எப்போதும் தயக்கமின்றி தங்கள் சிறந்ததை வழங்குகிறார்கள். குடிமக்களுக்கு உதவ அவர்களின் விடாமுயற்சி மற்றும் தயார்நிலை குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.