நலமுடன் உள்ளார் முன்னாள் கேப்டன் கபில் தேவ்
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தான் நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேட்பன் கபில்தேவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆன்ஜியோ பிளாஸ்டி சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலை சீராக உள்ளது.
இருதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்பை சரிசெய்ய உடனடி சிகிச்சை வழங்கப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கபில்தேவின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர் மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாக கையை உயர்த்திக்காட்டி புன்னகைக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு கபில்தேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவருக்கு ஆன்ஜியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. அடுத்த ஓரிரு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், நல்ல முறையில் தனது உடல்நிலை முன்னேறி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.