புதிய ரிலீஸ் தேதியுடன் வெளியானது சூர்யாவின் சூரரைப்போற்று ட்ரெய்லர்..
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய திரு ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கிய இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்த படக்குழு அக்டோபர் 30-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் இத்திரைப்படம் நேரடியாக ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவித்தது.

ஆனால் இந்திய விமானப்படையின் தடையில்லா சான்றிதழ் பெறுவதில் தாமதமானதால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.
இதையடுத்து இந்திய விமானப்படையின் தடையில்லா சான்றிதழை பெற்றிருக்கும் படக்குழு தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக நவம்பர் 12-ஆம் தேதியன்று சூரரைப்போற்று திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் சூர்யாவின் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த திரைப்படத்தின் ட்ரெய்லரையும் வெளியிட்டுள்ளது.