சினிமா

இருக்கு ஒரு தரமான சம்பவம் இருக்கு : சூர்யா – பாண்டிராஜ் கூட்டணியில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு

சூர்யா – சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகியுள்ள ‘சூரரைப்போற்று’ திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாக இருக்கிறது.

இத்திரைப்படத்தை அடுத்து வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்துக்காக தயாராகி வருகிறார் சூர்யா. இதற்காக அவர் நீண்ட தலைமுடியுடன் புதிய கெட்டப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் சூர்யாவுக்கு 40-வது படம், இயக்குநர் பாண்டிராஜூக்கு 10-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பசங்க 2’ படத்துக்குப் பின்னர் தற்போது பாண்டிராஜ் – சூர்யா கூட்டணி இணைந்துள்ளது. ‘சூர்யா 40’ அறிவிப்பை பதிவிட்டு ட்வீட் செய்திருக்கும் இயக்குநர் பாண்டிராஜ், “இருக்கு ஒரு தரமான சம்பவம்” என்று கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ திரைப்படத்தை முடித்து விட்டு பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.