இந்தியா

நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாகவே இருக்கும் – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக அல்லது பூஜ்ஜியத்தை நெருங்கும் வகையில்தான் இருக்கும் என மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: “இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால், நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்மறையாக அல்லது பூஜ்ஜியத்தைதான் நெருங்கும். இதற்கு முதன்மையான காரணம், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் – ஜூன்) இந்தியப் பொருளாதாரம் 23.9 சதவிகிதம் சுருங்கியது. பொது முடக்க தளர்வுகளால் பெரு நிறுவன பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகளைக் காண்பிக்கின்றன.

பண்டிகை காலம் பொருளாதாரத்தை மேலும் ஊக்குவிக்கும். 3-வது மற்றும் 4-வது காலாண்டில் பொருளாதாரம் நேர்மறையான வளர்ச்சி பெறலாம். ஒட்டுமொத்தமாக ஏப்ரல் 2020-மார்ச் 2021 நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்மறையாக அல்லது பூஜ்ஜியத்தைதான் நெருங்கும். அடுத்த நிதியாண்டிலிருந்து பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பெறும்.

பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்க, மக்கள் பணத்தைச் செலவழிக்க வேண்டும் என்பதில்தான் அரசின் கவனமாக இருக்கிறது.”