இந்தியா

பிரான்ஸ் நாட்டிலிருந்து நவம்பர் 5ம் தேதி மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வருகை

பிரான்ஸ் நாட்டிலிருந்து நவம்பர் மாதம் 5ம் தேதி மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வரவுள்ளன.

இந்திய விமானப்படையை பலப்படுத்தும் வகையில், பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் விமானங்களை 59 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க அரசு ஒப்பந்தம் செய்தது.

இதில் டஸால்ட் ஏவியெசன் நிறுவனத்தால் முதல்கட்டமாக ஒப்படைக்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள், ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தை கடந்த ஜூலை மாதம் வந்தடைந்தன. பின்னர் செப்டம்பர் மாதம் அந்த 5 விமானங்களும் இந்திய விமானப்படையில் முறைப்படி சேர்க்கப்பட்டன.

இந்நிலையில் 2ஆவது கட்டமாக 3 ரபேல் விமானங்கள் நவம்பர் மாதம் 5ம் தேதி பிரான்சிலிருந்து நேராக அம்பாலாவுக்கு வரவுள்ளன.

கடந்த முறை 5 விமானங்கள் வந்தபோது, ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் அபுதாபி நகரிலுள்ள விமானப்படைதளத்தில் இடை நிறுத்தம் செய்யப்பட்டன. அதுபோல இல்லாமல் இந்த 3 விமானங்கள், இடை நிறுத்தம் இல்லாமல் நடுவானில் எரிபொருள் நிரப்ப்பப்பட்டு நேராக அம்பாலா வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் மேலும் 3 விமானங்களும், மார்ச் மாதம் 3 விமானங்களும், ஏப்ரல் மாதம் 7 விமானங்களும் வருகைதரவுள்ளன. இதுபோல ஏப்ரல் மாதத்துக்குள் இந்தியாவுக்கு மேலும் 16 ரபேல் விமானங்கள் வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே வந்த 5 ரபேல் விமானங்கள், ஏப்ரலுக்குள் வரவுள்ள 16 விமானங்கள் என மொத்தம் 21 ரபேல் விமானங்களில், 18 அம்பாலாவிலுள்ள கோல்டன் ஆரோஸ் விமானப்படை பிரிவில் சேர்க்கப்படுமெனவும், இந்தியாவின் கிழக்கு பகுதியில் சீனாவால் எழுந்துள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் எஞ்சிய 3 ரபேல் விமானங்கள் மேற்குவங்கத்திலுள்ள ஹசிமாரா விமானபடைதளத்துக்கு அனுப்பப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .