அரசியல்தமிழ்நாடு

அறிக்கை என்னுடையது அல்ல.! ஆனால், அதி இருக்கும் தகவல் உண்மை!..

தனது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் அறிக்கை, தன்னுடைய அல்ல என்றும், ஆனால், அதில் இருக்கும் தகவல்கள் உண்மை என்றும், நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். மேலும், தகுந்த நேரத்தில், தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளதாகவும், நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.

அரசியல் என்னும் போர்க்களத்தில் விரைவில் கால்பதிப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்தின் உடல்நிலை பற்றிய அறிக்கை ஒன்று, சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், 2016ஆம் ஆண்டு மே மாதம் தமக்கு சிறுநீரக பாதிப்பு தீவிரமடைந்து, அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், இது ஒரு சிலருக்கே தெரியும் என்ற ரீதியில், நடிகர் ரஜினி சொல்வது போல் அந்த போலி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டிருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும் என்றும், அந்த போலி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே, கொரோனா காலத்தில், மக்களை சந்திப்பது அத்தனை உசிதமாக இருக்காது என, மருத்துவர்கள் தம்மிடம் கூறியதை, ரஜினிகாந்த் தெரிவிப்பது போல அந்த கடிதம் வைரலாகி வந்தது .

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளிக்கும் விதமாக, நடிகர் ரஜினிகாந்த், டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது அறிக்கைப் போல, ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாக பரவிக் கொண்டிருப்பதாக, ரஜினிகாந்த் கூறியுள்ளார். அது தன்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் நடிகர் ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், அதில் வந்திருக்கும், தனது உடல்நிலை தொடர்பான தகவல்கள், தமக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை என்றும், ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தகுந்த நேரத்தில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து, தனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிக்க இருப்பதாகவும், நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.