சிலிண்டர் வினியோகிக்க கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க கேஸ் ஏஜென்சிகளில் திடீர் சோதனை நடத்த வேண்டும்!…
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் டெலிவரி செய்வதற்காக, நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க கேஸ் ஏஜென்சிகளில் திடீர் சோதனை நடத்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர்களின் பணியை வரன்முறை செய்ய கோரி தொடர்ந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
சமையல் எரிவாயு சிலிண்டர்களை வினியோகிக்கும் போது கூடுதல் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட ஏஜென்சி நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும் என்ற எண்ணெய் நிறுவனங்களின் விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், நுகர்வோரின் புகார்களை எதிர்பார்க்காமல் கேஸ் ஏஜென்சிகளில் திடீர் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டனர்.